Last Updated:
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் 80-க்கும் மேற்பட்ட கள ஆய்வாளர்களைக் கொண்டு ‘ஆக்சிஸ் மை இந்தியா’ விரிவான ஆய்வை மேற்கொண்டது
மேற்கு வங்க மாநிலத்தின் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல், சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், மிகப்பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும், அதீத கண்காணிப்பு வளையத்திற்குள்ளும் நடந்து முடிந்தது. ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட அசாதாரண பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகின.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தபோது, 1,100 கம்பெனி மத்தியப் படைகள் (சுமார் 1.1 லட்சம் வீரர்கள்) பயன்படுத்தப்பட்டனர். ஆனால், இந்த 2026 தேர்தலில் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது. மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) என நாட்டின் அனைத்து முக்கியப் புலனாய்வு அமைப்புகளும் மேற்கு வங்கத்தில் நிலைகொண்டுள்ளன. தேர்தல் முடிவடைந்த பின்னரும், வன்முறையைத் தவிர்க்கும் பொருட்டு இந்தப் படைகள் உடனடியாகத் திரும்பப் பெறப்படாது என அறிவிக்கப்பட்டது.
படைக்குவிப்பை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மத்தியப் படைகளைக் கொண்டு வாக்காளர்களை அச்சுறுத்தி, பாஜகவிற்குச் சாதகமான சூழலை உருவாக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
இத்தகைய பதற்றமான சூழலுக்கு மத்தியில், மேற்கு வங்க மாநிலத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடப் போவதில்லை என இந்தியாவின் முன்னணி கணிப்பு நிறுவனமான ‘ஆக்சிஸ் மை இந்தியா’ (Axis My India) அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் 80-க்கும் மேற்பட்ட கள ஆய்வாளர்களைக் கொண்டு விரிவான கணக்கெடுப்புகளை நடத்தினோம். ஆனால், ஆய்வில் பங்கேற்ற வாக்காளர்களில் சுமார் 70 சதவீதத்தினர் தங்களின் அரசியல் விருப்பத்தை எவ்விதத்திலும் வெளிப்படுத்த முன்வரவில்லை. வாக்காளர்களின் இந்த அமைதி காரணமாக, துல்லியமான புள்ளிவிவரங்களை எட்ட முடியவில்லை. தவறான முடிவுகளை வழங்குவதைத் தவிர்க்கவே, இந்த முறை கருத்துக்கணிப்பு முடிவுகளை நிறுத்தி வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
இதர கணிப்பு நிறுவனங்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலை நீடிப்பதாகக் கூறினாலும், நம்பகமான நிறுவனமான ‘ஆக்சிஸ் மை இந்தியா’வின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்களின் இந்த மௌனம் ஆளுங்கட்சிக்குச் சாதகமா அல்லது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியா என்பது மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது மட்டுமே தெரியவரும். நவீன இந்திய அரசியல் வரலாற்றில், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேற்குவங்கத்தில் என்ன நடக்கிறது… கணிப்புகளை வெளியிட மறுத்த ‘ஆக்சிஸ் மை இந்தியா’… பின்னணி என்ன?


