தனது பச்சிளம் குழந்தையை வேண்டுமென்றே கைவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட 30 வயதுத் தாய்க்கு, கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,500 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி காலை 11 மணியளவில், கிள்ளான், கம்போங் ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள ஒரு வீட்டின் முன், நோர் ஐன் ஷஃபினா நோராஸ்மான் எனும் அந்தப் பெண் தனது ஆண் குழந்தையைக் கைவிட்டுச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் சித்தி சுபைதா மஹத் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தன் மீதான குற்றச்சாட்டை நோர் ஐன் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அவர் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான தேசிய சட்ட உதவி அறக்கட்டளை வழக்கறிஞர் கே. நதியா, குறைந்தபட்ச அபராதத்தை முன்வைத்து வாதிடுகையில், முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியையான நோர் ஐன், இந்த வழக்கின் காரணமாகத் தனது வேலையை இழந்துள்ளார்.
தனித்து வாழும் தாயான அவர், தனது செயலுக்காகத் தற்போது மிகவும் வருந்துகிறார் என்றும் மேலும், தனது குழந்தையைத் தேசியப் பதிவுத் துறையில் முறைப்படி பதிவு செய்ய அவர் விரும்புவதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317-இன் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதில் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்பிருந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை துணை அரசு வக்கீல் சல்மான் அல் ஃபரிஸி வழிநடத்தினார்.




