ஆனால் இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு மிகவும் வலுவாக இருப்பதாகவும், ஈரான் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹெக்செத் பொதுவெளியில் கூறி வருகிறார். முந்தைய அமெரிக்கப் போர்களான கொரியா, வியட்நாம் அல்லது ஆப்கானிஸ்தான் போன்றவை பல தசாப்தங்களாக நீடித்தன. ஆனால், ஈரானுக்கு எதிரான இந்த நடவடிக்கை சில வாரங்களிலேயே “நிச்சயமான ராணுவ முடிவுகளை” எட்டியுள்ளதாக ஹெக்செத் கூறி வருகிறார்.
அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகி வருவதாக வெளியாகும் செய்திகளை மறுக்கும் ஹெக்செத், அமெரிக்கா “Locked and Loaded” நிலையில் இருப்பதாகவும், எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தேவையான ஏவுகணைகள் மற்றும் தளவாடங்கள் இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால், ஹெக்செத் கூற்றுகளையும் அறிவிப்புகளையும் “வெற்றி பிம்பம்” என கூறுகிறார் துணை அதிபர் வான்ஸ். அமெரிக்கா ஏற்கனவே சுமார் 1,000 ஸ்டெல்த் குரூஸ் ஏவுகணைகளையும் 1,200 பேட்ரியட் இன்டர்செப்டர்களையும் பயன்படுத்திவிட்டதாகத் பல அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த இருப்பில் 50% க்கும் மேல் என கணக்கிடப்படுகிறது.
ஈரான் போர் குறித்து டிரம்ப்பிடம் தவறான தகவல் அளிக்கப்படுகிறதா?
பென்டகன் தலைவரான ஹெக்செத், அதிபர் டிரம்ப்பிற்கு Victory Narrative-வை மட்டுமே கூறிவருவதாக வான்ஸ் கருதுகிறார். அதாவது போரின் உண்மையான பொருளாதார மற்றும் ராணுவப் பாதிப்புகளை மறைத்து, டிரம்ப் எதைக் கேட்க விரும்புகிறாரோ அதை மட்டுமே ஹெக்செத் அவரிடம் தெரிவிக்கிறார் என்பது வான்சின் குற்றச்சாட்டாக உள்ளது. ஈரானுடனான தற்போதைய மோதலால் அமெரிக்காவின் ஆயுத இருப்பை மீண்டும் நிரப்ப சுமார் 6 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவிடமிருந்து தைவானைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் திறனைக் குறைக்கக்கூடும் என்று வான்ஸ் அஞ்சுகிறார்.
மேலும், அமெரிக்காவிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட குரூஸ் ஏவுகணைகளுக்கு எதிரான தற்காப்பு அமைப்புகள் இல்லை என விண்வெளி கொள்கைக்கான பாதுகாப்புத் துறை உதவிச் செயலர் மார்க் பெர்க்கோவிட்ஸ் (Marc Berkowitz) கூறியுள்ளார். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் (Mach 5+) செல்வதோடு மட்டுமல்லாமல், பயணித்துக்கொண்டிருக்கும் போதே, பாதையை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவையாகும்.
அமெரிக்காவிடம் தற்போதுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளான THAAD, Patriot போன்றவை ஒரு குறிப்பிட்ட பாதையில் வரும் ஏவுகணைகளைத் தடுக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளன. வளிமண்டலத்தின் Sweet spot பகுதியில் நெகிழ்வுத்தன்மையுடன் வரும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களைக் கண்டறிந்து அழிப்பது THAAD, Patriot வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுத்து நிறுத்துவது கடினம்.
விண்வெளியில் மிக உயரத்தில் வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் THAAD மற்றும் Aegis அமைப்புகள் தடுத்து நிறுத்தும். இவை Exo-atmosphere என்று அழைக்கப்படும் வளிமண்டலத்திற்கு வெளியே சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்தில் செயல்படும்.
தரைக்கு அருகில் அல்லது குறைந்த உயரத்தில் வரும் இலக்குகளைத் தடுப்பவை Patriot அமைப்புகள். இவை சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் உயரத்திற்குள் செயல்படும்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் சரியாக 30 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வரையிலான இடைவெளியில் பறக்கின்றன. Sweet spot என்றழைக்கப்படும் இந்த உயரம் விண்வெளி பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகவும் “தாழ்வானது”, சாதாரண வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகவும் “உயரமானது”. இந்த இடைவெளியை நிரப்ப, அதிபர் டிரம்ப் சுமார் 180 பில்லியன் டாலர் மதிப்பிலான “கோல்டன் டோம்” என்ற புதிய ஏவுகணை பாதுகாப்பு கவசத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
இது விண்வெளி அடிப்படையிலான சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஹைப்பர்சோனிக் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், சீனா மற்றும் ரஷ்யாவிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அமெரிக்காவிடம் இன்று செயல்பாட்டு ரீதியான தடுப்பு அமைப்பு ஏதுமில்லை என்பதுதான் நிதர்சனம். அதனால்தான் “நமது பாதுகாப்பு விளிம்பு மறைந்துவிட்டது” என்று அமெரிக்க விண்வெளிப் படை தளபதிகள் எச்சரித்து வருகின்றனர்.
வான்ஸ் மற்றும் ஹெக்செத் இடையே உரசல்கள் ஒரு புறம் இருக்க, போர் குறித்து முடிவெடுப்பதற்கான காலக் கெடுவும் விரைவில் முடிவடைய உள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின்படி, அதிபர் ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. டிரம்ப் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ராணுவ நடவடிக்கைகள் தற்காலிக அனுமதியின் கீழ் நடந்து வருகின்றன. அந்த அனுமதி அல்லது “War Powers Resolution” காலக்கெடு மே 1-ஆம் தேதியுடன் முடிகிறது.
இதற்குள் டிரம்ப் காங்கிரஸிடம் முறையான போர் அறிவிப்புக்கான ஒப்புதலைப் பெற வேண்டும் அல்லது ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். இந்தக் காலக்கெடு நெருங்குவதால்தான் ஜே.டி. வான்ஸ் இப்போது ஆயுத இருப்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறார். “ஈரான் வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கிறது, இன்னும் சில நாட்களில் போர் முடிந்துவிடும்” என்று கூறி டிரம்ப் காங்கிரஸிடம் ஒப்புதல் கோருகிறார்.
ஆனால் வான்ஸோ, “ஆயுதங்கள் தீர்ந்து வருகின்றன, இந்தப் போர் நீண்ட காலம் நீடித்தால் ஆபத்து” என்று எச்சரிப்பதன் மூலம், மே 1-க்குப் பிறகு போரைத் தொடர்வது அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்.

