கோலாலம்பூர்:
ஜோகூரில் தனது மனைவியை அடித்துக் கோமா நிலைக்குத் தள்ளிய அதே நபர், தற்போது சுங்கை பட்டாணியில் உள்ள தனது மற்றொரு மனைவியைத் தாக்கியதில் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. 43 வயதான அந்தச் சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அம்பாங்கான் ஹைட்ஸ் (Ambangan Heights) பகுதியில் 39 வயதான அரசு ஊழியர் ஒருவர், தனது கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இதில் 12 வாரக் கருவுற்றிருந்த அந்தப் பெண்ணுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதுடன், முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் தற்போது சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்என்று, கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் கூறினார்.
“இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 43 வயது நபர், ஏற்கனவே ஜோகூரில் கோமா வழக்கில் தொடர்புடைய அதே நபர் என்பதை உறுதி செய்கிறோம். அவர் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 325-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிரமாகத் தேடி வருகிறோம்.”
கடந்த 2021-ஆம் ஆண்டு, லர்கின் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜஹிதா நோர்டின் (48) என்ற பெண் அவரது கணவரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அப்போது கர்ப்பமாக இருந்த ஜஹிதாவிற்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மண்டை ஓட்டின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜஹிதா 2021 நவம்பரில் ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்த போதிலும், இன்றுவரை அவர் படுக்கையிலேயே கோமா நிலையில் உள்ளார்.
இந்த வழக்கிற்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜஹிதாவின் கணவர் ரோஸ்மைனி அப்துல் ராவூஃப்பிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், மேல்முறையீடு முடியும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க அவரது வழக்கறிஞர் கோரியதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் அவர் தற்போது வெளியில் உள்ளார்.
தண்டனையில் இருந்து தற்காலிகமாகத் தப்பித்த நிலையில், மீண்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அவரது கருவில் இருந்த குழந்தையையும் அழித்துள்ள இந்த நபரைச் சட்டத்தின் முன் நிறுத்த போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.




