கோலாலம்பூர்:
பகாங் மாநிலத்தில் உரிமம் இல்லாத பொழுதுபோக்கு மையங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக சுமார் RM64,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில், 50 வயது மதிக்கத்தக்க உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு, ஐந்து நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பகாங் மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் பணியாற்றிய போது, அங்குள்ள சட்டவிரோத பொழுதுபோக்கு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட அதிகாரி மாமூல் வசூலித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஊழல் முறைகேடு 2020 முதல் 2023-ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு பொழுதுபோக்கு மைய உரிமையாளர்களிடமிருந்து மாதாந்திர அடிப்படையில் லஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பணம் அவரது தனிப்பட்ட வங்கிச் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஏற்று, குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்ற மாஜிஸ்திரேட் எலினா மஹுசின், சந்தேக நபரான அந்த அதிகாரியை மே 2-ஆம் தேதி வரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட அதிகாரி நேற்று (ஏப்ரல் 27) மதியம் 2 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பகாங் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் முகமட் ஷுக்கூர் மஹ்மூத் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கு 2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 17(a)-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணை போகும் அதிகாரிகள் மீதான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உயர்மட்டக் கைது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




