Last Updated:
ஹரியானா ஃபரிதாபாத் தீரஜ் நகரில், ஆறாவது பெண் குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசி கொன்ற தாய் கைது.
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசி தாய் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் அடுத்த தீரஜ் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஒரு குழந்தை இறந்து கிடப்பதாக கடந்த 23ஆம் தேதி அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்துவிட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அதன்படி அங்கிருந்த சி.சி.டி.வி.க்களை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அந்தப் பக்கமாக ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றதும், பிறகு அவர் திரும்பி வரும்போது அப்பெண்ணின் கையில் குழந்தை இல்லாததும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் குறித்து விசாரணை நடத்தி அவரைக் கண்டறிந்தனர். பிறகு அவரிடம் விசாரித்தபோது அது தனது குழந்தைதான் என்றும், ஏன் குழந்தையைக் கொலை செய்தார் என்பது குறித்தும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
காவல்துறை விசாரணையில், பிகார் மாநிலம், மதுபானி பகுதியைச் சேர்ந்தவர்கள் நீலம் மற்றும் சஞ்சய். இவர்களுக்கு திருமணம் முடிந்து தற்போது ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் வசித்து வருகின்றனர். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், ஒன்றரை வருடத்திற்கு முன் ஆறாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஏற்கனவே கடும் வறுமையில் இருந்துவரும் அக்குடும்பத்தினருக்கு ஆறாவதாக பெண் குழந்தை பிறந்ததால், அதனைக் கவனிக்க முடியாமலும், செலவு செய்ய முடியாமலும் இந்தக் கொடூரக் காரியத்தைச் செய்ததாக அப்பெண் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 மாத பெண் குழந்தையை கழிவுநீர் கால்வாயில் வீசிக் கொன்ற தாய்! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல்


