Last Updated:
“ஜனநாயகத்தில் எப்போதுமே வன்முறைக்கு இடமில்லை; அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25, 2026 இரவில் (இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 7 மணியளவில்), வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் மேடையில் இருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தில் டிரம்ப் மற்றும் மெலானியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், அவர்கள் நலமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இருந்த அறையில் தாக்குதல்
இச்சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “வாஷிங்டன் டி.சி.யில் நடந்த சம்பவத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மெலேனியா, துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் ஆகியோர் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன். அவர்கள் நலமுடன் பாதுகாப்பு இருக்க வாழ்த்துகிறேன். ஜனநாயகத்தில் எப்போதுமே வன்முறைக்கு இடமில்லை; அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
Relieved to learn that President Trump, the First Lady and Vice President are safe and unharmed following the recent security incident at a Washington DC hotel. I extend my best wishes for their continued safety and well-being. Violence has no place in a democracy and must be…
— Narendra Modi (@narendramodi) April 26, 2026
இதற்கிடையே அமெரிக்காவில் டிரம்ப் நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தியவர், கலிபோர்னியாவின் டொரன்ஸ் நகரைச் சேர்ந்த 31 வயதான ஆசிரியர் கோல் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. டொனால்ட் டிரம்பின் நிகழ்ச்சி நடைபெறவிருந்த நேரத்தில், சந்தேக நபர் துப்பாக்கியுடன் ஹோட்டலுக்கு எப்படி வந்தார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
Apr 26, 2026 10:30 AM IST


