கோலாலம்பூர் :
கோலாலம்பூர், ஸ்தாப்பாக் (Setapak) பகுதியில் சட்டவிரோதமாக டீசல் கடத்த முயன்ற லோரி ஓட்டுநர் ஒருவரை உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
‘Ops Tiris 4.0’ நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் சுமார் 3,500 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று (ஏப்ரல் 24) மாலை 6.40 மணியளவில், ஸ்தாப்பாக்கில் உள்ள எஸ்.கே. மரியன் கான்வென்ட் பள்ளிக்கு அருகில் ஒரு லோரி நிறுத்தப்பட்டபோது அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையை நடத்தினர்.
ஜாலான் கெப்போங்கில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இருந்து வெளியேறிய அந்த லோரி, சந்தேகத்திற்கிடமான முறையில் சென்றதைக் கண்ட சிறப்பு அதிகாரிகள் குழு அதனைப் பின்தொடர்ந்தது. பின்னர், ஜாலான் கூச்சிங்கில் உள்ள மற்றொரு பெட்ரோல் நிலையத்திற்குச் சென்ற அந்த லோரி, மீண்டும் எரிபொருள் நிரப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், லாரியில் சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
சோதனையின் போது, லோரியின் பின்புறத்தில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு பெரிய கொள்கலன்கள் (IBC tanks) வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், லாரியின் உண்மையான எரிபொருள் தொட்டியிலிருந்து இந்த கூடுதல் கொள்கலன்களுக்கு டீசலை மாற்றும் வகையில் உறிஞ்சும் பம்ப் (Suction pump) ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுநரிடம், கட்டுப்படுத்தப்பட்ட பொருளான எரிபொருளைக் கையாள்வதற்கோ அல்லது சேமித்து வைப்பதற்கோ எவ்வித முறையான ஆவணங்களும் இல்லை என்பது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து டீசல்: 3,500 லிட்டர் (சந்தை மதிப்பு சுமார் RM17,920), லோரி, கருவிகள் மற்றும் எரிபொருள் உட்பட மொத்தம் RM52,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை முறைகேடு செய்யும் எவருக்கும் எதிராக சமரசமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கோலாலம்பூர் KPDN தலைமை அமலாக்க அதிகாரி முகமட் ஷாஹ்ரான் முகமட் அர்ஷாத் எச்சரித்துள்ளார்.
இந்த வழக்கு 1961-ஆம் ஆண்டு வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் (Supply Control Act 1961) விசாரணை செய்யப்பட்டு வருகிறது.




