புத்ராஜெயாவில் உள்ள புத்ரா பாலத்தில் ஏப்ரல் 19 அன்று அதிகாலை 12.30 மணியளவில் சூப்பர்பைக்குகளில் பந்தயம் நடத்திய இருவர், அந்த நிகழ்வின் காணொளி வைரலானதைத் தொடர்ந்து நேற்று காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சம்சுரி இசா கூறுகையில், இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்ட சூப்பர்பைக் உரிமையாளர்களில் ஒருவர், விசாரணைக்கு உதவ முன்வந்துள்ளார் என்றார்.
முதற்கட்ட விசாரணையில், அந்தக் குழுவினர் பந்தயம் நடத்துவதற்காக மட்டுமல்லாமல், அதனைப் பதிவுசெய்து சமூக ஊடக உள்ளடக்கத்தை வெளியிடுவதற்காகவும் அந்த இடத்தில் இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மஸ்ஜித் புத்ராவுக்கு அருகில் உள்ள அந்த இடத்தில் இந்தக் குழு கூடியிருப்பது இதுவே முதல் முறை எனத் தெரிகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். சூப்பர்பைக் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில், 31 மற்றும் 33 வயதுடைய இரண்டு ஆண்களைக் காவல்துறை பின்னர் கைது செய்தது. மேலும், வைரல் வீடியோவில் காணப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் தங்கள் வாக்குமூலங்களை அளித்த பின்னர், அதே நாளில் காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் பலரை நாங்கள் தற்போது தேடி வருகிறோம் என்று சம்சூரி கூறினார். சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி, அனுமதி இல்லாமல் பொதுச் சாலையில் பந்தயங்களை நடத்துவது சட்டவிரோதமாகும்.




