நேர்மைக்கு உதாரணமாக பல கதைகளை படித்திருப்போம், கேட்டிருப்போம் மற்றும் நிஜ சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் UAE-உள்ள துபாயில் இந்தியாவை சேர்ந்த ஒரு சிறுவன் தனது நேர்மையால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து இந்தியர்களை பெருமைப்படுத்தி உள்ளான்.
குறிப்பிட்ட இந்திய சிறுவனின் நேர்மை மற்றும் புத்திசாலித்தனம் துபாய் காவல்துறையின் பாராட்டுக்கள் மற்றும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும் துபாயில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்திய சிறுவனான முஹம்மது அயன் யூனிஸ் (Muhammad Ayan Younis) காட்டிய நேர்மை துபாய் காவல்துறையினரால் கவுரவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்ன செய்தான் சிறுவன் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்…
இந்திய சிறுவனான முஹம்மது அயன் யூனிஸ் துபாயில் வசிக்கிறார். ஒரு நாள் அவர் தனது தந்தையுடன் துபாயின் பிரபல டூரிஸ்ட் பகுதி ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்படி நடந்து செல்லும்போது சாலையில் ஒரு விலையுயர்ந்த கடிகாரம் கீழே கிடந்ததை பார்த்துள்ளான். காஸ்ட்லியான வாட்ச்சை பார்த்ததும் கடந்துசென்று அதை அலட்சியப்படுத்தவில்லை மற்றும் அதனை தனக்காக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக தனது தந்தையின் உதவியுடன் உடனடியாக அந்த கடிகாரத்தை துபாய் போலீசாரிடம் சென்று ஒப்படைத்துள்ளான் இந்திய சிறுவனான முஹம்மது அயன் யூனிஸ்.
புகார்:
முன்னதாக துபாய்க்கு வந்த ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி தனது நாட்டிற்குச் செல்வதற்கு முன், துபாயில் தனது விலையுயர்ந்த கைக்கடிகாரம் தொலைந்து போனதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து துபாய் போலீசார் அவர் தொலைந்ததாக குறிப்பிட்ட மிகவும் மதிப்புமிக்க கடிகாரத்தை கண்டுபிடிக்க பல முயற்சிகள் செய்தும் இறுதி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணி தவறவிட்ட கடிகாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நாட்டின் இமேஜ் கெட்டுவிடும் என்று துபாய் போலீசார் கவலை அடைந்தனர். இந்த நிலையில் தான் சிறுவன் முஹம்மது அயன் யூனிஸ், தான் சாலையில் கண்டெடுத்த கடிகாரத்தை துபாய் போலீசார் வசம் ஒப்படைத்தான். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த கைக்கடிகாரம் தான் அது என்பது தெரியவந்தது.
சிறுவனை கவுரவித்த துபாய் போலீசார்…
இதனை தொடர்ந்து தொலைந்து போன கடிகாரத்தைப் பற்றி புகார் அளித்த குறிப்பிட்ட சுற்றுலா பயணியை துபாய் காவல்துறை கண்டுபிடித்தது. அவரது கடிகாரம் தானா அது என்று உறுதிசெய்த பிறகு அவரிடம் அது திரும்ப கொடுக்கப்பட்டது. பின்னர் சிறுவன் முஹம்மது அயன் யூனிஸின் நேர்மையை பாராட்டி துபாய் காவல்துறை சார்பில் அவனுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்ட்டது. டூரிஸ்ட் போலீஸ் துறையின் இயக்குனர் பிரிகேடியர் கல்பான் ஓபேட் அல் ஜல்லாஃப் அவர்களால் சிறுவன் யூனிஸை கவுரவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல் ரஹ்மான் மற்றும் சுற்றுலா மகிழ்ச்சி பிரிவு தலைவர் கேப்டன் ஷஹாப் அல் சாதி ஆகியோர் கலந்து கொண்டு சிறுவனை பாராட்டி கவுரவித்தனர்.
#News
| Dubai Police Honours Child for Honesty After Returning Tourist’s Lost Watch
#News | Dubai Police Honours Child for Honesty After Returning Tourist’s Lost Watch
Details:https://t.co/6dFnBky55r#YourSecurityOurHappiness#SmartSecureTogether pic.twitter.com/bVccqxabP5
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) May 12, 2024
இந்திய சிறுவனின் நேர்மையான நடத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் உயர் தார்மீக தரங்களையும், இங்கிருக்கும் பாதுகாப்பையும் பிரதிபலிக்கிறது என்றார் பிரிகேடியர் அல் ஜல்லாஃப். துபாய் அதிகாரிகளால் சிறந்த குடிமை உணர்வுக்காக ஒரு சாதாரண நபருக்கு விருது வழங்கப்படுவது இது முதல்முறை அல்ல.
கடந்த ஏப்ரல் மாதம், உணவு விநியோக நிறுவனமான தலாபத்தில் டெலிவரி மேனாக பணிபுரியும் ஜீஷான் அஹ்மத் இர்ஷாத் அஹ்மத், தொங்கிக் கொண்டிருந்த போக்குவரத்து சிக்னலை சரிசெய்யும் செயல் அவருக்குப் பின்னால் காரில் இருந்த ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில், அந்நாட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஏ) அதை கவனித்து ஜீஷானை RTA தலைமையகத்திற்கு அழைத்து பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
.