2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்துவதற்கு முயற்சி செய்து வருவதாகவும், 2029 யூத் ஒலிம்பிக், 2024 செஸ் ஒலிம்பியாட், உலக கடற்கரை விளையாட்டு போன்றவை எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நியூஸ் 18 குழுமத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு நாடு தயாராக உள்ளதால், இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதாக தெரிவித்தார். இதற்காக ஒரு குழுவை உருவாக்கி, மற்ற நாடுகளில் நடைபெறும் உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
கடந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தியதை விரிவாக ஆய்வு செய்த அனைவரும், இந்தியாவில் இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்தும் திறன் உள்ளது என்று நம்புகிறார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
”2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தியது. அப்போது பல கசப்பான அனுபவங்கள் இருந்தன. இதனால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதில் இந்தியர்களின் நம்பிக்கையை அது சிதைத்தது. ஆனால், ஜி20 மாநாட்டுக்குப் பிறகு அந்த நம்பிக்கை திரும்பியது. நாமும் இதுபோன்ற நிகழ்வுகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடத்த முடியும் என்று மக்கள் உணர்ந்துள்ளனர்” என்று பிரதமர் கூறினார்.
”ஜி20 உச்சி மாநாட்டை நடத்தியதன் மூலம் மற்றொரு நேர்மறையான தாக்கம் என்னவென்றால், இந்தியா முழுவதும் 60-70 இடங்களில் சம அளவில் நடத்தப்பட்டன. இது நாடு முழுவதும் நம்பிக்கையை வளர்க்க வழிவகுத்தது. டெல்லியில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், அது ஒரு அரசின் திட்டமாக தோன்றியிருக்கும். ஆனால், இவ்வாறு நடத்தியதன் மூலம் இந்தியா எவ்வளவு பெரிய அளவுக்கு செல்ல முடியும் என்பதை காட்டியது” என்று தெரிவித்தார்.
1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் ஒலிம்பிக் போட்டிகளை பார்க்கச் சென்றிருந்தபோது, மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு விவரங்களில் ஆர்வமாக இருந்ததாக பிரதமர் தெரிவித்தார். அவ்வளவு பெரிய நிகழ்வு எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது என்று பார்க்க விரும்பியதாகவும், ஒலிம்பிக் கிராமத்திற்கு செல்பவர்கள் தங்களது கார்களை 200-250 கி.மீ. தொலைவில் நிறுத்த வேண்டும் என்பதை அறிந்ததாகவும் கூறினார். ”அங்கு ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் பேருந்திற்கும் ஒவ்வொரு வண்ணம் பூசப்பட்டிருக்கும். நாம் விரும்பிய விளையாட்டிற்கு குறிப்பிட்ட பேருந்தில் ஏற வேண்டும். அந்த பேருந்துகள் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கிருந்து வண்ணக் குறியீட்டுடன் கூடிய சிறப்பு ரயில்கள் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அழைத்துச் சென்றது. இது போன்று ஒலிம்பிக் மற்றும் உலகளாவிய நிகழ்வுகளை நடத்துவது குறித்த விவரங்களை ஆய்வு செய்யும்படி குழுவிடம் கூறியுள்ளேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
.