Last Updated:
பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்திய ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தாலும், மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் விளையாடி 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் ஸ்காரை உயர்த்தினார்.
லக்னோ தரப்பில் முகமது ஷமி மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
ஆயுஷ் பதோனி, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகிய மூவரும் அடுத்தடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மிட்செல் மார்ஷ் தனியொருவனாக போராடி 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
அவருக்குப் பின் வந்த நிக்கோலஸ் பூரன் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் லக்னோ அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்குச் சுருண்டது.
ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நந்ரே பர்கர் மற்றும் பிரிஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவின் தோல்வியை உறுதி செய்தனர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்திய ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியது. லக்னோ அணி 9 ஆவது இடத்திற்கு பின்தங்கியது.
Apr 22, 2026 11:48 PM IST


