செல்வநாயகம் கபிலன்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செம்மணி மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான நிதி பற்றாக்குறை காரணமாக, கடந்த காலங்களில் பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது உரிய நிதி கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து, எதிர்வரும் ஏப்ரல் 27-ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அகழ்வுப் பணிகள் நடைபெறும் தினத்தன்று அதற்குரிய விசேட நிபுணர் குழுவினர் நேரில் முன்னிலையாவார்கள் என இந்த வழக்கிற்காக முன்னிலையான சட்டத்தரணி எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
எதிர்வரும் 27-ஆம் திகதி காலை 8:30 மணியளவில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருமளவில் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதையிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள், நீண்டகாலமாகத் தமக்கிருக்கும் நீதி தேடலில் இது ஒரு முக்கிய கட்டம் எனத் தெரிவித்தனர்.
செம்மணி புதைக்குழி விவகாரம் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாத ஒரு மர்மமாக இருந்து வரும் நிலையில், இந்த அகழ்வுப் பணிகள் உண்மைகளை வெளிக்கொணருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


