Last Updated:
மூன்று முக்கிய விவகாரங்களுக்கு மத்தியில் பிரதமரின் இன்றைய உரை நாட்டின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று இரவு 8:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இந்த உரை அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய உரையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை (Delimitation) ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.
வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 528 உறுப்பினர்களில் 298 பேர் ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அரசியல் சாசன திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (352 வாக்குகள்) கிடைக்காததால், மசோதா தோல்வியில் முடிந்ததது. இதனால் ஏற்பட்ட அரசியல் சூழல் குறித்து பிரதமர் மோடி விரிவாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான மோதல்கள் காரணமாக ஹோமுஸ் ஜலசந்தி அவ்வப்போது மூடப்படுவதால் இந்தியாவுக்கான எல்பிஜி (LPG) விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் அவற்றை சீரமைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விளக்கமளிக்கலாம்.
ரஷ்ய-உக்ரைன் போரில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 26 இந்தியர்களை மீட்பது குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பு மற்றும் நாடு திரும்புவதற்கான முயற்சிகள் குறித்தும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட வாய்ப்புள்ளது. இந்த மூன்று முக்கிய விவகாரங்களுக்கு மத்தியில் பிரதமரின் இன்றைய உரை நாட்டின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.


