கோலாலம்பூர்:
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தைப்பிங்கில் (Taiping) செல்போன் தொடர்பான சிறு தகராறில், தனது மூத்த சகோதரரைக் காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்த பெண்ணை உயர் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஜூலை 5-ம் தேதி, இந்த வழக்கின் முதல் குற்றவாளியான இளைஞர், தனது காதலியின் வீட்டில் செல்போனை மறந்து வைத்துச் சென்றுள்ளார். அந்த போனுக்கு வந்த அழைப்பை அப்பெண்ணின் அண்ணன் எடுத்துப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன், போனை வாங்க அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்தபோது இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலில், அந்தப் பெண்ணும் அவரது காதலனும் இணைந்து அண்ணனைத் தாக்கியுள்ளனர். முதலில் அவரைப் பலவீனப்படுத்தி, கைகளைப் பின்னால் கட்டியுள்ளனர். பின்னர் கழுத்தில் கத்தியால் குத்தியதில், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு போர்வையாலும் பிளாஸ்டிக் பையாலும் சுற்றப்பட்ட நிலையில் அண்ணனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில், கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயம் காரணமாக அவர் மெல்ல மெல்ல துடித்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நூர் ருவேனா முகமது நுர்தின், “உடனடியாக உயிர் போகாமல், ரத்தம் வெளியேறி அவர் மெதுவாக உயிரிழந்தபோது அனுபவித்த வலியையும் வேதனையையும் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.
குற்றம் நடந்தபோது இவர்கள் இருவரும் 14 மற்றும் 15 வயதுடைய மைனர்களாக இருந்ததால், சட்டப்படி இவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. எனவே, ‘குழந்தைகள் சட்டம்’ பிரிவு 97(2)-ன் கீழ் பேராக் மாநில சுல்தானின் விருப்பப்படி (Detained at the pleasure of the Ruler) சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகள் இருவரும் மைனர்களாக இருந்ததால் அவர்களின் பெயர்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அந்தப் பெண் தனக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாகவும், அதனால் கருணை காட்ட வேண்டும் என்றும் கோரினார். ஆனால், “சொந்த சகோதரனைக் கொன்றதற்காக அந்தப் பெண் சிறிதும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்ட நீதிபதி, அக்கோரிக்கையை நிராகரித்தார்.
மேலும், இவர்கள் பெரியவர்களாக இருந்திருந்தால் தாராளமாக மரண தண்டனை வழங்கியிருப்பேன் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
The post செல்போன் தகராறு: அண்ணனைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தங்கை மற்றும் காதலன் – நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

