ஜாசின்:
நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டியதோடு, தனது காதலியை மடியில் அமரவைத்து ஸ்டியரிங்கைப் பிடிக்கவிட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், இன்று ஜாசின் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமை சமூக வலைதளங்களில் வைரலான 8 வினாடிகள் கொண்ட காணொளி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (North-South Expressway) சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர், தனது காதலியை மடியில் அமரவைத்து ஸ்டியரிங்கைப் பிடிக்கவிட்டிருந்தது அதில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, மற்றொரு வாகனத்தின் டேஷ்கேம் (Dashcam) காட்சிகளும் வெளியாகி, அந்தப் பேருந்து போக்குவரத்து நெரிசலில் மிகவும் ஆபத்தான முறையில் வளைந்து சென்றது உறுதி செய்யப்பட்டது.
பொது வழக்கறிஞரின் உத்தரவைத் தொடர்ந்து, 36 வயது ஓட்டுநர் மற்றும் 21 வயதுடைய அவரது காதலி ஆகிய இருவரும் இன்று காலை ஜாசின் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் பணிபுரிந்த ‘ஸ்ரீ மாஜு குரூப்’ (Sri Maju Group) நிறுவனம், இந்தச் சம்பவத்தையடுத்து அவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்தது.
இச்சம்பவம் தொடர்பாக இவர்கள் இருவரும் ஏற்கனவே 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓடும் பேருந்தில் பயணிகள் உயிருடன் விளையாடிய இந்தச் செயல், மலேசியப் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து ஓட்டுநர்களின் பொறுப்பற்ற இத்தகைய செயல்கள், கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என்பதை இந்த வழக்கு உணர்த்துகிறது.
இந்தச் சம்பவம் குறித்த நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




