மலேசியத் தமிழர்களின் தியாகமும் உழைப்பும் அடங்கிய 200 ஆண்டுகால வரலாறு இன்னும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை; அந்த வரலாற்றுத் தரவுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது அவசியம் என்று ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை, கோலாலம்பூர் நேதாஜி மண்டபத்தில், சிங்கப்பூர் எழுத்தாளர் கழக மேனாள் தலைவர் நா. ஆண்டியப்பனின் ‘வாமனத் தீவு’ நூல் வெளியீட்டு விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சரவணன் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். விழாவில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ பா. சகாதேவன் முன்னிலை வகித்து முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். விழாவில் தலைமையுரையாற்றிய சரவணன், வெறும் கதைகளையும் கட்டுரைகளையும் மட்டும் எழுதிக் கொண்டிருக்காமல், உண்மையான வரலாற்றுத் தரவுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவும் எழுத வேண்டும் என எழுத்தாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

வரலாறு தெரியாத ஒரு சமூகம் தனது அடையாளத்தை இழந்துவிடும். நமது முன்னோர்களின் பெருமைகளையும் ஆற்றலையும் வருங்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ள இதுபோன்ற வரலாற்றுப் பதிவுகள் மிகவும் அவசியம்” எனவும் அவர் வலியுறுத்தினார்.முன்னதாக, கவிஞர் நெல்லை ஜெயந்தா இலக்கியப் பேருரை ஆற்ற, சிங்கப்பூர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ வாழ்த்துரை வழங்கினார்.மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தொடர்புக் குழுத் தலைவர் பெ. இராஜேந்திரன் வரவேற்புரை வழங்கிய வேளையில், மன்னர் மன்னன் மருதை நூலை அறிமுகம் செய்து வைத்தார்.மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஞான சைமன் விழாவை தொகுத்து வழங்கிய வேளையில், டான்ஸ்ரீ க. குமரன் உட்பட பிரமுகர்கள், எழுத்தாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ராமேஸ்வரி ராஜா





