உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனும் பெயர் பெற்ற இந்தியாவில் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இது நாட்டிலேயே அதிக நாள்கள் நடைபெற்ற இரண்டாவது மக்களவைத் தேர்தலாகும்.
ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் தேர்தலில் சுமார் 100 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். கிட்டத்தட்ட முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, வாக்கு எண்ணிக்கை வெளியாக 44 நாள்கள் உள்ளன. பலரும். நாட்டிலேயே இவ்வளவு நீண்ட நாள்கள் மக்களவைத் தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் அது அப்படியல்ல. இதுதான் இரண்டாவது மிக நீண்ட தேர்தல் காலம் என்பதுதான் உண்மை.
கடந்த 1951 – 52ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4 மாதங்கள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதுபோல கடந்த 1980ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலக்கட்டத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 4 நாள்களில். இந்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல், சரியாக அறிவிப்பு வெளியாகி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளை கணக்கிட்டால் 82 நாள்கள்.
ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே மாதத்தில் 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே உள்ளது. ஏன் இந்த முறை இத்தனை நாள்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது?
அதாவது, நாட்டிலேயே மிக அதிகமானோர் வாக்களிக்கும் தேர்தலாக இது அமைந்திருப்பதால், வாக்குப்பதிவுக்குத்தேவையான கருவிகள் அனைத்து மற்றும் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் திட்டம் போன்றவைதான் இத்தனை நாள்களுக்கு தேர்தல் நடத்தப்பட காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் காலநிலை, அரசு விடுமுறை, முக்கிய திருவிழா, தேர்வுகள் என அனைத்துக் காரணிகளையும் ஆராய்ந்தபிறகே தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டன என்கிறார்.
ஏழு கட்டங்களாக பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் தெரிந்துவிடும். இது நாட்டின் மிக நீண்ட தேர்தல் என்றால், முதல் தேர்தல் எத்தனை நாள்கள் நடந்திருக்கும்?
நாட்டின் மிக நீண்ட தேர்தல் 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை நடந்துள்ளது. 25 மாநிலங்களில் உள்ள 401 தொகுதிகளுக்கு, 489 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இந்த தேர்தல் நடந்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடைமுறைகளைக் காட்டிலும், அப்போது நடந்த தேர்தல் மிகவும் வேறுபட்டுள்ளது.