புதுடெல்லி: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய மற்றும் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற வாகனங்களை புழக்கத்திலிருந்து கட்டாயம் அகற்ற வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், பிஹார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியாணா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து ஊக்கமளித்து வருகின்றன.
அதன்படி பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனம் வாங்குவோருக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரையிலான தள்ளுபடியை மாநிலங்கள் அறிவித்துள்ளன. அதேநேரம், வணிக வாகனங்களுக்கு சாலை வரியில் 15 சதவீதம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 70,000 பழைய வாகனங்கள் தாமாக முன்வந்து புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இவற்றில் பெரும்பாலானவை மத்தியஅல்லது மாநில அரசு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களும் தாமாகவே பதிவு நீக்கம் செய்யப்பட்டு அவற்றை அழிப்பதற்கு மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு விடுகின்றன.
பழைய வாகனங்களை அழித்துபுதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கர்நாடகா சாலை வரியில் நிலையான தள்ளுபடியை வழங்குகிறது. உதாரணமாக ரூ.20 லட்சம் விலையுள்ள வாகனங்களுக்கு ரூ.50,000 சலுகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சக அதிகாரி கூறுகையில், “ பழைய வாகனங்களை அழிக்க 37 பதிவு செய்யப்பட்ட ஸ்கிராப்பிங் மையங்கள் உள்ளன. இப்போது, இவை 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ளன.
அதேபோன்று, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 52 தானியங்கி சோதனை நிலையங்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க கவனம் செலுத்தி வருகிறோம். இதனால், மக்கள் அவற்றை எளிதாக அணுக முடியும்” என்றார்.