Last Updated:
48 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவத் தளத்தை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஆயிரத்து 800 கிலோமீட்டர் தொலைவில் நடுக்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் ராணுவத் தளம் அமைந்துள்ளது. ஈரானில் இருந்து 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த தீவை நோக்கி ஈரான் அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை வீசித் தாக்க முயன்றது. அதில், ஒரு ஏவுகணை நடுவழியில் தோல்வியடைந்து விட்ட நிலையில், மற்றொரு ஏவுகணையை அமெரிக்காவின் எம்எம்-3 ஏவுகணை மூலம் இடைமறித்து அழித்ததாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைகள் செல்லும் அதிகபட்ச திறன் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தான் கூறி வந்த நிலையில், 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தாக்குதல் நடத்த முயன்றது மேற்கத்திய நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிடம் உள்ள ஏவுகணையால் லண்டன், பெர்லின், பாரிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களை தாக்க முடியும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. அதேநேரம், டியாகோ கார்சியா தீவு மீதான ஏவுகணை தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 48 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், தங்களது மின் கட்டமைப்புகளை தாக்கினால், அமெரிக்காவிற்கு சொந்தமான எரிசக்தி நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களை தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.
Chennai,Tamil Nadu


