Last Updated:
தஞ்சாவூரில் கோடை கால நெல் சாகுபடி தீவிரம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான கோடை கால நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக பம்புசெட் மற்றும் கிணற்றுப் பாசன வசதி கொண்ட விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை கால நடவு பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. ஜனவரி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நடவு செய்யப்படும் பயிர்கள் கோடை காலப் பயிர்களாகக் கருதப்படுகின்றன. நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு மின்மோட்டார் மூலம் பாசன வசதி செய்து சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டு கோடை சாகுபடிக்காக ஏடிடி 53 மற்றும் சிஓ 51 போன்ற குறுகிய கால நெல் ரகங்களை விவசாயிகள் அதிகமாகத் தேர்வு செய்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கத்தைத் தாங்கும் திறன் மற்றும் பூச்சித் தாக்குதல் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் இவ்வகை ரகங்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன.
வேளாண்மைத் துறை விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்களை போதுமான அளவில் கையிருப்பில் வைத்துள்ளது. அதே நேரத்தில், கோடை காலத்தில் சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும் என டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சில பகுதிகளில் நெல் சாகுபடிக்கு மாற்றாக உளுந்து உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடிக்கும் விவசாயிகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

