இராகவன் கருப்பையா – சட்டத்தை கையிலெடுப்பவர்கள் பல வேளைகளில் முன் கோபத்திற்கு இடமளித்து பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அவசரப்பட்டு குற்றம் புரிந்துவிடுகின்றனர்.
மற்ற பல வேளைகளில் சட்டம் அதன் கடப்பாட்டை மறந்து ‘ஏனோ தானோ’ எனும் நிலைப்பாட்டில் செயலாற்றத் தவறினாலும் இத்தகையச் குழல் ஏற்படத்தான் செய்கிறது.
அப்பட்டமாக நிகழும் குற்றங்களைக் ‘கண்டும் காணாமல் காலாட்டிக் கொண்டிருக்கும்’ சட்டம்தான் இதற்கு வித்திடுகிறது என்றால் அது மிகையில்லை.
குற்றச் செயல்களை தட்டிக் கேட்க வேண்டிய சட்டம் ‘பல்லில்லாப் புலியைப் போல’ சோம்பிக் கிடப்பதால்தான் ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ ஆகிறான். இதனைத்தான் நாம் இப்போது கண்கூடாகக் காண்கிறோம்.
அண்மைய காலமாக நம் நாட்டில் ‘கோயில் உடைப்பு’ மற்றும் ‘கோயில் ஹராம்'(சட்ட விரோதக் கோயில்) போன்ற வாசகங்கள் பலராலும் உச்சரிக்கப்படாத நாள்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நிலைமை தற்போது வரம்பு மீறி போய்க் கொண்டிருப்பதை அரசாங்கம் உணர்கிறதோ இல்லையோ வெகுசன மக்களை, குறிப்பாக நம் சமுதாயத்தை இந்த விவகாரம் அதிக அளவில் பாதிக்கிறது என்பது ‘வெள்ளிடை மலை.’
‘நாம் பொறுமை காக்க வேண்டும்,’ என்பதே இச்சூழலுக்கான ‘தாரக மந்திரமாகும்.’ இதனைத்தான் நம் சமூகத்தைச் சார்த்த அரசியல்வாதிகளும் பிற இயக்கங்களின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் எவ்வளவுதான் பொறுமை காத்தாலும் அந்தப் பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பதை பறைசாற்றுவதைப் போல சில அசம்பாவிதங்கள் நிகழத் தொடங்கிவிட்டன என்பது கவலைக்குரிய விஷயம்.
நம் சமயத்தையும் இனத்தையும் தொடர்ந்தாற்போல் கேவலமாக விமர்சித்து இழிவுபடுத்தி வரும் இரு நபர்களுக்கு எதிராக இவ்வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டும்.
சந்திரா எனும் ஒரு நபருடைய வீடு தாக்கப்பட்டு அவருடைய வாகனங்கள் தீயூட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதே போல ஸம்ரி காளிமுத்து எனும் மற்றொரு நபரைத் தாக்கியதாக 20 வயது இளைஞர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஸ்ம்ரி காளிமுத்துவுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக நாடளாவிய நிலையில் ஏறத்தாழ 1000 புகார்கள் செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.
காவல் நிலையத்தில் அவருக்கு விருந்தோம்பல் நடக்கிறது. சட்டத்திற்கு மேல் சவாரி செய்ய சலுகைகள் உள்ளதைப் போல பந்தாவாக உலா வருகிறார்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது, “இதர சமயங்களோடு ஒப்பிடுகையில் இந்து மதத்தை பாதுகாக்க இந்நாட்டில் சட்டம் இல்லையா,” எனும் கேள்வி எழுகிறது.
ஏனெனில் மற்ற சமயங்கள் இழிவுபடுத்தப்பட்டால் அடுத்த கணமே சட்டம் வீறு கொண்டு பாய்ந்து சம்பந்தப்பட்டவர்களை கவ்விப் பிடித்து இழுத்துவந்து நீதிமன்றத்தில் ஏற்றுகிறது.
எண்ணற்ற அரசியல்வாதிகள் ஒருமித்தக் குரலோடு ஆவேசமாய் கருத்துரைப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. திரைக்குப் பின்னால் ‘அரசியல் ஆதாயம்’ எனும் ஒரு அம்சம் ஒழிந்து கொண்டிருப்பதும் நமக்குத் தெரியாமல் இல்லை.ஆனால் இந்து மதத்தை இழிவுபடுத்துவோருக்கு காவல் நிலையத்தில் விருந்துபசரிப்பு நடத்தப்படுகிறது. குற்றத்தை வன்மையாகக் கண்டிக்க உருப்படியான நாதியில்லை.
அடையாளம் தெரியாத ஒரு நபர் கோயில் ஒன்றின் சூலத்தை காலால் மிதித்து வளைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்த சம்பவமும் கூட ஒரு சமயத்தை இழிவுபடுத்தும் செயல்தானே! சட்ட அமலாக்கத்தில் ஏன் பாராமுகம்? ‘மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?’
இத்தகையச் சூழல்தான் சந்திராவும் ஸம்ரி காளிமுத்துவும் தாக்கப்பட்டதற்கானக் காரணங்களாக இருக்கக் கூடும் எனும் போதிலும், சட்டத்தை கையிலெடுப்பது குற்றம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

