அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேறியது. குறிப்பாக, சஞ்சு சாம்சனின் அதிரடி ஃபார்ம் இந்தியாவுக்குப் பெரும் பலமாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 97 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக அரைசதம் என ருத்ரதாண்டவம் ஆடி வரும் அவர், இறுதிப்போட்டியிலும் மேஜிக் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஷான் கிஷன், கேப்டன் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே என இந்திய பேட்டிங் வரிசை அசுர பலத்துடன் உள்ளது. பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங்கின் வேகம் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் சுழல் எதிரணிக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன.
மறுபுறம், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2ஆவது முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து, தனது முதல் கோப்பையைக் கைப்பற்றத் துடிக்கிறது. டிம் சைஃபர்ட், பின் ஆலன் ஆகியோரின் அதிரடித் தொடக்கமும், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், சாண்ட்னர் ஆகியோரின் ஆல்-ரவுண்ட் திறமையும் இந்திய அணிக்குச் சவாலாக இருக்கும்.
உலகக்கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் இதற்கு முன் மோதிய 3 முறையும் நியூசிலாந்தே வென்றுள்ளது. அந்த மோசமான சாதனையை உடைத்து, சொந்த மண்ணில் கோப்பையை ஏந்தி வரலாறு படைக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இரவு 7 மணிக்கு, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் இந்த இறுதிப்போட்டி அரங்கேறுகிறது.

