Last Updated:
மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் இன்று பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்டத்தை திருத்தக் கூடாது, வங்கி ஊழியர்களுக்கு வாரம் 5 நாட்கள் மட்டும் வேலை அரசுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்தும், நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்தப் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தமிழகத்தை பொருத்தவரை ஆளும் கட்சியான திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் பொது சேவை நிறுவன ஊழியர்கள் பங்கேற்பதால், அரசு அலுவலக வேலைகள் மற்றும் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. அரசு பேருந்து சேவை, எல்.ஐ.சி உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், 125 நாட்கள் வேலைத் திட்டப் பணிகளும் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பொதுவேலை நிறுத்தத்தால் பாஜக ஆளும் ஒடிசா, அசாம் மாநிலங்களிலும் பெரும் தாக்கம் இருக்கும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதால், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற சேவைகள் பாதிக்காது. இதேபோன்று கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு இன்று வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்படுவதாகவும், வார விடுமுறை, பணி ஓய்வு உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீதும், போராட்டத்தில் கலந்துகொள்ளும் மற்றும் தூண்டிவிடும் செயலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீதும் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.


