தொடக்கத்தில் பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கை, 1964 ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாக ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும் வழக்கம் அப்போதுதான் உருவானது. நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள ஏதுவாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் ஆய்வறிக்கை ஒரே புத்தகமாக சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. 2014-15 நிதியாண்டு முதல், இரண்டு தொகுதிகளாக சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. முதல் தொகுதியில், நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் ஆய்வுகள் விவரிக்கப்பட்டிருக்கும். இரண்டாம் தொகுதியில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகள் இடம்பெற்றிருக்கும்.
சமீபகாலமாக பொருளாதார ஆய்வறிக்கைகள் பல நிறங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன.
2018 – ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலின சமத்துவத்தைக் குறிக்க பிங்க் நிறத்தில் வெளியிடப்பட்டது.
2019-ஆம் ஆண்டு வான நீல நிறத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ‘Blue Sky Thinking’ என்று பெயர். அதாவது, எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல், புதிய கோணத்தில் பொருளாதாரத்தைச் சிந்திப்பது என்று பொருள். இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான யோசனைகள் அதில் இடம்பெற்றிருந்தன.
2020-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் ஒரு சுவாரசியமான பகுதி சேர்க்கப்பட்டிருந்தது. அதற்குப் பெயர் ‘Thalinomics’. இந்தியாவில் ஒரு சாதாரண மனிதன் சாப்பிடும் ஒரு தட்டு உணவின் விலை, கடந்த ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கிறது என்பதை வைத்துப் பணவீக்கம் விளக்கப்பட்டிருந்தது. “பொருளாதாரம் சாமானியனின் தட்டிலிருந்தே தொடங்குகிறது” என்பதை இந்த ஆய்வறிக்கை உணர்த்தியது.
2021- ஆம் ஆண்டில் கொரோனா காலத்தில் போராடிய சுகாதாரப் பணியாளர்களைப் போற்றும் விதமாக லாவெண்டர் நிறத்தில் வெளியிடப்பட்டது. அப்போது முதல்முறையாக டிஜிட்டல் வடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
2022-ல் அஜைல் அணுகுமுறை… அதாவது மிக வேகமாக முடிவெடுப்பதே இதன் மையக்கருத்து. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ள, ஏதுவாக திட்டமிடப்பட்டது.
2023-ல் மீண்டெழுதல் மற்றும் வேகம்… கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியா முழுமையாக மீண்டெழுந்து, உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறியதை இந்த அறிக்கை கொண்டாடியது.
2024, தேர்தல் ஆண்டு என்பதால், விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. . பின்னர் ஜூலை 2024-ல் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு அறிக்கை, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கட்டுப்பாடுகளைக் குறைத்தல் மற்றும் வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தது…

