Last Updated:
ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் வரலாற்றில் 142 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான கேன் ரிச்சர்ட்சன், தனது 34-வது வயதில் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு தொடங்கிய தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போது நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் (BBL) தொடரின் முடிவில் முழுமையாக விடைபெறுகிறார்.
காயம் மற்றும் ஃபார்ம் குறைவு காரணமாக நடப்பு பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடிய நிலையில், இந்தத் திடீர் ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்காக 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 84 சர்வதேச விக்கெட்டுகளை ரிச்சர்ட்சன் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும், வெள்ளை பந்து கிரிக்கெட்டில், குறிப்பாக இன்னிங்ஸின் கடைசி ஓவர்களில் துல்லியமாகப் பந்துவீசும் திறமை படைத்தவராக அவர் அறியப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் வரலாற்றில் 142 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ள அவர், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி உள்ளிட்ட முன்னணி அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
ஓய்வு குறித்து அவர் கூறுகையில், “என்னிடமிருந்த அனைத்துத் திறனையும் வெளிப்படுத்திவிட்டதாக உணர்கிறேன், இதுவே விடைபெறச் சரியான தருணம்” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.


