Last Updated:
பூச்சித் தாக்குதலிலிருந்து பயிர்களைக் காக்க விவசாயிகள் பலவகை மருந்துகளை பயன்படுத்திப் பார்த்தும் முழுமையான பலன் கிடைக்காத நிலையில் இந்த கொட்டமுத்து செடி பயிர்களைக் காக்கும் உயிர்வேலியாக விளங்குகிறது.
கொட்டமுத்து செடி என்றழைக்கப்படும் ஆமணக்கு செடியை நாம் ஆங்காங்கே சாலை ஓரங்கள் மற்றும் காலி நிலங்களில் பார்த்திருப்போம். ஆனால் இது பயிர் பாதுகாப்புக்கான ஒரு “தற்கொலை செடி” (suicide crop) என விவசாயிகளால் கருதப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
குறிப்பாக பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் மிருகங்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் தன்மை காரணமாக இந்த கொட்டமுத்து செடி தற்கொலை செடி என்று கூறப்படுகிறது.
வயல்வெளிகளில் எல்லை பகுதிகளில் கொட்டமுத்து செடியை வளர்ப்பதன் மூலம், பயிர்களை தாக்கும் பெரும்பாலான பூச்சிகள் நெருங்காமல் தடுக்க முடியும். சில வகை பூச்சிகள் இந்த செடியின் வாசனை அல்லது தன்மையால் ஈர்க்கப்பட்டு, பிரதான பயிர்களை விட்டுவிட்டு இதை நோக்கி செல்லும்.
இதனால் முக்கிய விளைச்சலுக்கு ஏற்படும் இழப்புகள் குறைகின்றன. இதனை வளர்ப்பதன் மூலம் என்னென்ன பூச்சிகள் பயிரை பாதிக்க வந்தன என்று, அந்த பூச்சிகள் கொட்டமுத்து செடிகளில் விட்டு சென்ற எச்சங்கள், முட்டைகள் போன்றவற்றை கொண்டு அறியலாம்.
மேலும், கால்நடைகள் மற்றும் காட்டுமிருகங்கள் வயலுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், கொட்டமுத்து செடி ஒரு இயற்கை தடுப்புச்சுவராக செயல்படுகிறது. இந்த செடியை வயல் ஓரங்களில் அடர்த்தியாக வளர்த்தால், மற்ற பயிர்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்பதால், மீண்டும் விவசாயிகளிடையே இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற சூழலில், உயிர்வேலியாக விளங்கும் கொட்டமுத்து செடி போன்ற இயற்கை பயிர் பாதுகாப்பு முறை முக்கியத்துவம் பெறுகின்றது. குறைந்த செலவில், குறைந்த பராமரிப்புடன் வளரும் இந்த செடி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

