மும்பை:
சளி, காய்ச்சலுக்கான மருந்துகளில் 174 மருந்துகள் தரமற்றவை என்று இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளையும் மத்திய, மாநில தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வின் அடிப்படையில், குறைந்தது 167 மருந்துகள் தரநிலையை எட்டவில்லை, மற்றவை போலியானவை என்றும் உறுதியாகியுள்ளது.
ஆய்வில் தரநிலையை எட்டாத அல்லது போலி மருந்துகள் என உறுதிசெய்யப்பட்டதும், தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த மாதம் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளி, கிருமித் தொற்று, சீரணப் பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 167 மருந்துகள் தரமற்றதாகவும், 7 மருந்துகள் போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டு அது தொடர்பான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




