இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கியது. சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்தியா இதுவரை கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் இது முதன்மையானது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள 16-ஆவது இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டின் போது, இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதற்காக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் மற்றும் ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி 110%-லிருந்து 40% ஆகக் குறைக்கப்படும். இது வோக்ஸ்வேகன், BMW, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய நன்மையாக அமையும்.
இந்திய ஜவுளித் துறைக்கு ஐரோப்பியச் சந்தையில் வரி இல்லாத அனுமதி கிடைக்கும். இதனால் வங்கதேசம் மற்றும் வியட்நாம் நாடுகளுடனான போட்டியில் இந்தியாவிற்குப் பலம் சேர்க்கும். சர்ச்சைக்குரிய விவகாரமாகக் கருதப்படும் விவசாயத் துறை, தற்போதைக்கு இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. கடந்த ஒன்றாம் தேதி முதல் ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் 87% ஏற்றுமதிப் பொருட்களுக்கான Generalised Scheme of Preferences எனப்படும் வரிச் சலுகைகளை ரத்து செய்துள்ளது.
இதனால், ஜவுளி, ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி செய்பவர்கள் தற்போது கூடுதல் வரி செலுத்த வேண்டியுள்ளது இந்த நிலையைத் தவிர்க்க, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ‘டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்’ மற்றும் ஐரோப்பாவின் GDPR விதிகளை ஒருங்கிணைத்து, நாடுகளுக்கு இடையே தகவல்கள் பாதுகாப்பாகப் பரிமாறப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுங்க ஆவணங்கள் மற்றும் கையொப்பங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், பொருட்கள் அனுப்பப்படும் நேரம் கணிசமாகக் குறையும்.
ஜனவரி 1, முதல் ஐரோப்பிய யூனியன் தனது Carbon Border Adjustment Mechanism என்ற திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் போன்ற அதிக கார்பன் வெளியேற்றும் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்க வழி செய்கிறது.
இந்நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் அல்லது கார்பன் கிரெடிட்களைப் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தற்போதைய ஒப்பந்தத்தின் மிக முக்கியமான ‘பேரம் பேசும்’ புள்ளியாகும்.
இந்திய தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வேலை செய்வதற்கான விசா நடைமுறைகளை எளிதாக்க ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளது. ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவின் நிதிச் சேவைகள் மற்றும் சட்டச் சேவைகளில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது..
ஐரோப்பிய விஸ்கி மற்றும் ஒயின்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா படிப்படியாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் 27 வளர்ந்த நாடுகள் உள்ளதால், இந்தியா செய்து கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
தடையற்ற ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வர இன்னும் 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

