Last Updated:
இன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளன.
வாரம் 2 நாட்கள் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நாடு முழுவதும் பொதுத்துறை, தனியார், கூட்டுறவு உள்ளிட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளை தவிர, மாதந்தோறும் 2-ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், வாரம் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், திட்டமிட்டபடி இன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளன. ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் குடியரசு தின விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தொடர்ந்து 4ஆவது நாளான இன்று வங்கி சேவை பாதிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதனிடையே, வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு சேவை குறைபாடு ஏற்படக் கூடாது என டெல்லியில் நடைபெற்ற நிதித்துறைச் செயலர் தலைமையிலான அவசர ஆலோசனைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


