பொதுவாக, போர்க் குற்றவாளிகள் தான் ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்படுவர். ஆனால், பொதுமக்கள் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டனர்.
ஏன் இங்கே பொதுமக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய அனைத்து மக்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்று கூறமுடியாது.
காரணம், பல மக்கள் தங்களது நாட்டில் வேலை கிடைக்காததால்… சரியான நிதி ஆதாரம் இல்லாததால் தான், அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்குக் கண்ணியம் என்பது அடிப்படையானது.
மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகள் ட்ரம்பின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும், இந்தியா இதை அமைதியாகவே கடந்தது.

இதை அமெரிக்காவின் சுதந்திர தினம் என்று கூறுவதை விட, ட்ரம்பின் சுதந்திர தினம் என்று கூறலாம். காரணம், இந்தச் சுதந்திர தினத்தை அறிவித்ததே ட்ரம்ப் தான்.
அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூல் செய்கின்றன. இதனால், அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என்று கூறி, நாடுகள் மற்றும் அதன் அமெரிக்கப் பொருள்களுக்கு விதிக்கும் வரியைப் பொறுத்து, அந்தந்த நாடுகளுக்குப் பரஸ்பர வரியை விதித்தார்.
ட்ரம்ப் கூறிய அந்தச் சுதந்திர நாள், ஏப்ரல் 2, 2025.
இந்தியாவிற்கு ஆரம்பத்தில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை.
இந்த வரியினால் மிகவும் பாதிக்கப்பட்டது சீனா தான்.
பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி அறிவிக்கப்பட்டாலும், அதை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யவும்… குறைக்கவும் அவகாசம் கொடுத்தார் ட்ரம்ப்.
ஆனால், சீனாவிற்கு மட்டும் உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

