கோலாலம்பூர்:
மலேசியாவிற்குள் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள் நுழைவதைத் தடுக்க, பல்வேறு முகமைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகளைச் சுங்கத்துறை வரவேற்றுள்ளது.
இந்தச் சிறப்பு அதிரடிப்படைக்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தலைமை தாங்குகிறார். பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவு இறக்குமதியில் நிலவும் சட்டவிரோதச் செயல்கள், முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைக் களைவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று, சுங்கத்துறை தலைமை இயக்குனர் டத்தோ அனிஸ் ரிசானா முகமட் ஜைனுடின் தெரிவித்துள்ளார்.
சுங்கத்துறை நேரடியாக இறக்குமதி உரிமங்களை (Permits) வழங்குவதில்லை. மாறாக, பிற அரசு முகமைகள் வகுத்துள்ள சட்டங்களை அமல்படுத்துவதே எங்கள் பணி. முறையான உரிமம் இன்றி எந்தவொரு கொள்கலனும் (Container) விடுவிக்கப்படாது என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டின் சுங்க (இறக்குமதித் தடை) உத்தரவின்படி, மின்னணு கழிவு (e-waste) இறக்குமதியானது சுற்றுச்சூழல் துறையின் (DOE) கட்டுப்பாட்டில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவு இறக்குமதியை ‘சிறிம்’ (Sirim Bhd) நிறுவனம் ஒழுங்குபடுத்துகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை, போர்ட் கிள்ளானில் மின்னணு கழிவுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட 600 கொள்கலன்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அவற்றில் 593 கொள்கலன்கள் மேலதிக நடவடிக்கைக்காகச் சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மின்னணு மற்றும் பிளாஸ்டிக் கழிவு இறக்குமதியால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை மதிப்பீடு செய்ய, அடுத்த ஆறு மாதங்களுக்கு இக்கழிவுகளின் இறக்குமதிக்கு தற்காலிகத் தடை (Moratorium) விதிக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) பரிந்துரைத்துள்ளது.
சட்டவிரோத கழிவுச் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவு கடத்தல் குறித்த தகவல்கள் தெரிந்தால், பொதுமக்கள் சுங்கத்துறையின் கட்டணமில்லா எண்ணான 1-800-88-8855 என்ற எண்ணிற்கு அழைத்துத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.




