Last Updated:
அமெரிக்கா, ரஷ்யா, சீனா கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்க, உர்சுலா வான் டர் லெயன் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் அதன் இறையாண்மையை காக்க உறுதி தெரிவித்தனர்.
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற முயற்சித்து வரும் நிலையில், அதன் இறையாண்மையை காக்க உறுதி பூண்டிருப்பதாக ஐரோப்பிய தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவு சுயாட்சிப் பகுதியாக உள்ளது. அங்கு அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், கிரீன்லாந்தை ரஷ்யாவும், சீனாவும் கைப்பற்ற முயற்சிப்பதாகக் கூறி கிரீன்லாந்தை தங்கள் வசப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
அதற்கான பெருந்தொகையை கிரீன்லாந்தில் வசிக்கும் மக்களுக்கு தரவும் டிரம்ப் முன்வந்துள்ளார். தேவைப்பட்டால் கைப்பற்றுவோம் என்றும் எச்சரித்து வருகிறார். நேட்டோ அமைப்பில் உள்ள டென்மார்க் நாட்டிற்கு மற்றொரு நேட்டோ நாடான அமெரிக்காவே அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், ஐரோப்பாவில் உள்ள இதர நேட்டோ நாடுகள் டென்மார்க்கிறகு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவரான உர்சுலா வான் டர் லெயன் வெளியிட்ட அறிக்கையில், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோருடன் கிரீன்லாந்து விவகாரம் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.
அதில் கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் இறையாண்மையை காக்க உறுதி பூண்டிருப்பதாகவும், தங்கள் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பேண ஒன்றுபட்டு நிற்பதாகவும் உர்சுலா வான் டர் லெயன் தெரிவித்துள்ளார்.


