Last Updated:
புதையல் கிடைத்த இடத்தில் வீடு கட்டத் தயங்கும் குடும்பத்தினர், தங்களுக்குப் பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லக்குண்டி கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது பெரும் புதையல் கண்டெடுக்கப்பட்டது.
அப்பகுதியைச் சேர்ந்த கஸ்தூரவ்வா ரிட்டி என்பவர் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய அஸ்திவாரம் அமைத்தபோது, சுமார் 5 அடி ஆழத்தில் ஒரு செப்புப் பானை தென்பட்டது. அந்தப் பானையைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பளபளக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால தங்க ஆபரணங்கள் இருப்பதைக் கண்டு வீட்டின் உரிமையாளர்கள் வியப்படைந்தனர்.
கண்டெடுக்கப்பட்ட அந்தப் பானையில் சுமார் 470 கிராம் எடையுள்ள தங்க சங்கிலிகள், மோதிரங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் இருந்தன.
இவை 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்யாண சாளுக்கியர்கள் அல்லது ஹொய்சாலர் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
லக்குண்டி கிராமம் பழங்காலத்தில் 101 கோவில்கள் மற்றும் கிணறுகளைக் கொண்ட மிக முக்கியமான வணிக மையமாகத் திகழ்ந்ததால், மண்ணுக்கு அடியில் இது போன்ற வரலாற்று பொக்கிஷங்கள் புதைந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் ஹைலைட் என்னவென்றால், அந்தப் புதையலை முதலில் கவனித்த 8-ம் வகுப்பு மாணவன் பிரஜ்வல் மற்றும் அவனது குடும்பத்தினர், துளியும் பேராசைப்படாமல் உடனடியாக காவல்துறையினருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
அவர்களின் இந்த நேர்மையைப் பாராட்டி மாவட்ட நிர்வாகம் அவர்களைக் கௌரவித்தது. தற்போது அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு, தொல்பொருள் துறையினர் ஜேசிபி கருவிகள் மூலம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். புதையல் கிடைத்த இடத்தில் வீடு கட்டத் தயங்கும் அந்த ஏழைக் குடும்பத்தினர், தங்களுக்குப் பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


