Last Updated:
உத்தர பிரதேசத்தில் தாய் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் தாய் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்த இளைஞர், அவர்களின் தலையை சிதைத்து நரமாமிசம் சாப்பிட்டது குலைநடுங்க வைத்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் குஷிநகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் குப்தா. 30 வயதான இவர் மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். இவரின் மனைவி 28 வயதான பிரியங்கா மற்றும் தாயார் ரூனா தேவி இருவரும் குஷிநகரில் வசித்து வந்தனர் மும்பையில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய சிக்கந்தர், அங்கேயே டேரா போட்டுள்ளார்.
இதனிடையே, சொந்த ஊரில் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தவர் மதுபானம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதாக கிராம மக்கள் கூறியுள்ளனர். இதனால், மது போதையில் பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும் அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை அன்று வழக்கம்போல் மதுபோதை தலைக்கேறியதும் மனைவி மற்றும் தாயாரிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மிருகமாக மாறிய சிக்கந்தர், சிமெண்ட் செங்கலை எடுத்து மனைவி மற்றும் தாயாரின் தலையில் மாறி மாறி அரக்கத்தகமான தாக்கியுள்ளார்.
இதில், தலை சிதைந்த நிலையில் இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அச்சத்துடன் சிக்கந்தரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, காட்டேரி போன்ற காணப்பட்ட சிக்கந்தர், மனைவி மற்றும் தாயாரின் தலையை சிதைத்து, அதில் இருந்து நரமாமிசத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதைக் கண்டதும் ஊர் மக்களுக்கு அச்சத்தில் ரத்தமே உறைந்துள்ளது.
அப்படியும் ஆத்திரம் தீராமல் சைக்கோவாக மாறிய சிக்கந்தர், இறந்தவர்களின் உடலில் உள்ள சதைகளை பிய்த்து அங்கிருந்தவர்கள் மீது வீசியுள்ளார். குலைநடுங்க வைத்த இந்த சம்பவம் குறித்து, ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே, விரைந்து வந்த போலீசார் அங்கு கண்ட காட்சியை பார்த்து, அவர்களே ஆடியுப்போயுள்ளனர். பின்னர், கொலை செய்யப்பட்ட இரு பெண்களின் உடல்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்ற தாய் மற்றும் கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த போதை இளைஞர், அவர்களின் தலையை சிதைத்து நரமாமிசத்தை சாப்பிட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தையே உலுக்கியுள்ளது.
மிருகமாக மாறிய சைக்கோ.. தாய், மனைவியை கொடூரமாக கொன்று நரமாமிசம் சாப்பிட்ட இளைஞர்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்!


