Last Updated:
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பெற்றோருக்கான இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவி மற்றும் அரசு ஊழியர்களின் பெற்றோர்களுக்கான நிதி பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “இந்த அரசு உங்களுக்காக செயல்படுகிறது என்பதை காட்டுவதற்காகவே இந்த திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்.

மாற்றுத்திறனாளிகள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டாலோ, மாற்றுத்திறனாளி ஒருவரை திருமணம் செய்து கொண்டாலோ அவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அரசு வேலைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடம் வழங்கி வருகிறோம்.
அதேபோல், முதியவர்களுக்கான திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். குறிப்பாக அரசுப் பணியில் இருப்பவர்களின் பெற்றோர்களுக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இனி அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்டால், அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து 10% முதல் 15% வரையிலான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு அவர்களது பெற்றோர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பெற்றோர்களுக்கு உபயோகப்படாதவர்கள், சமூகத்திற்கும் பயன்பட மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
“பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்..” – முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி


