ஷா ஆலம்:
தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள பாரம்பரிய பன்றிப் பண்ணைகளை மூடிவிட்டு, அவற்றை புக்கிட் தாகாரில் உள்ள நவீன வசதிகளுக்கு உடனடியாக மாற்ற சிலாங்கூர் அரசு முடிவு செய்துள்ளது.
பாரம்பரிய முறையில் பண்ணைகள் நடத்தப்படுவதால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுப்பதே இந்த இடமாற்றத்தின் முக்கிய நோக்கமாகும் என்று, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இதற்காக அடையாளம் காணப்பட்ட 69 பண்ணை உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், உரிமம் இல்லாத பண்ணைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த இடமாற்றத்திற்கு அரசு நிதி அல்லது நிலம் வழங்கப்படாது. பண்ணை உரிமையாளர்கள் தனியார் நிலங்களை வாங்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு (EIA) சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
தற்போது சிலாங்கூரில் சுமார் 120,000 பன்றிகள் உள்ளன. இது உள்ளூர் தேவையில் 30 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனவே, இந்தப் பண்ணைகளை நவீனமயமாக்குவதன் மூலம் உள்ளூர் தேவையை நிறைவு செய்யவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை இந்த ஆண்டிற்குள்ளேயே நடைமுறைப்படுத்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.




