Last Updated:
வங்கதேசம் போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிக்கை வைத்தது, ஐசிசி நிராகரித்தது. முஸ்தபிஸுர் ரஹ்மான் IPL-இல் இருந்து நீக்கம். போட்டிகள் இந்தியா இலங்கையில் நடைபெற உள்ளன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தாங்கள் விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்குப் பதிலாக இலங்கையில் நடத்த வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் அணி நிர்வாகம் வைத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து தாக்கப்பட்ட நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மான், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பிசிசிஐ-யின் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேசம் மோதும் போட்டிகளை இந்தியாவில் நடத்தாமல் இலங்கையில் நடத்த வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் அணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், போட்டிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், மற்றொரு இடத்துக்கு மாற்றுவது அதிக சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
காணொலிக் காட்சி மூலம், வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஐ.சி.சி, போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. அத்துடன் கொல்கத்தா மற்றும் மும்பைக்கு பதிலாக அப்போட்டிகளை சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்தலாமா என ஐசிசி ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விவரங்கள் வங்கதேச அணிக்கு ஐசிசி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் வங்கதேச தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.


