கோலாலம்பூர்:
ஜோகூர் மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் தரைவழி சுங்கத் சாவடியியான சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் (BSI) மற்றும் சுல்தான் அபு பாக்கர் வளாகம் (KSAB) ஆகிய இரண்டு சோதனைச் சாவடிகளிலும் நிலவி வந்த ‘இ-கேட்’ முறையிலான பாஸ்போர்ட் சரிபார்ப்பு தொழில்நுட்ப சிக்கல்கள் நேற்று இரவு முதல் முழுமையாகச் சரிசெய்யப்பட்டன.
நேற்று (ஜனவரி 11) இரவு 11:00 மணியளவில் இ-கேட் சிஸ்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தொடர் தொழில்நுட்பக் கோளாறுகளால், வெளிநாட்டுப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. குறிப்பாக வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் என்று, ஜோகூர் மாநில பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு குழு ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் ஃபாஸ்லி முஹமட் சாலே தெரிவித்துள்ளார்.
மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என அனைவரும் இப்போது மின்னணு வாயில்களைத் தடையின்றிப் பயன்படுத்த முடிகிறது. “தற்போது இரண்டு வளாகங்களிலும் பயணிகளின் நடமாட்டம் சீராக உள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைக்குப் பிறகு, தரவு சரிபார்ப்பு (Data verification) மற்றும் சிஸ்டம் அளவுத்திருத்தம் (System recalibration) பணிகள் நிறைவடைந்துள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தச் சிக்கல் ஹார்டுவேர் (Hardware) குறைபாட்டினால் ஏற்படவில்லை; மாறாக, தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பில் (NIISe) ஏற்பட்ட தரவு ஒருங்கிணைப்பு மற்றும் சரிபார்ப்புப் பிழைகளே இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.
இந்தச் சீரமைப்பால், குடிவரவு அதிகாரிகளின் பணிச்சுமை குறைந்துள்ளதுடன், சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே தினசரி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.




