Last Updated:
கேப்டன் கில் மற்றும் விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் களம் இறங்கினர். கான்வே 67 பந்துகளில் 56 ரன்களும், நிகோல்ஸ் 69 பந்துகளில் 62 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து வந்த வில் யங் 12 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 71 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். அடுத்துவந்த கிளென் பிலிப்ஸ் 12 ரன்களும், மிட்செல் ஹே 18 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 16 ரன்களும், கிறிஸ்டியன் கிளார்க் 24 ரன்களும் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 301 ரன்கள் எடுத்தால் வெற்ற என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர் ரோஹித் சர்மா 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த கேப்டன் கில் மற்றும் விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தது.
சதம் அடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 91 பந்துகளில் 1 சிக்சர் 8 பவுண்டரியுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 29 ரன்கள் சேர்க்க 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 306 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


