Last Updated:
EOS-N1 செயற்கைக்கோள், Anvesha என அழைக்கப்படுகிறது, PSLV-C62 மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை ஏவப்படுகிறது. ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்பம் முக்கிய அம்சம்.
புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்டுள்ள “EOS-N1” செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நாளை ஏவப்படுகிறது. இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
EOS-N1 Earth Observation Satellite – Next Gen 1 என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள அடுத்த தலைமுறை புவி கண்காணிப்பு செயற்கைக்கோள். இந்த செயற்கை கோள் அன்வேஷா (Anvesha) என்றும் அழைக்கப்படுகிறது. அன்வேஷா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘தேடுதல்’ அல்லது ‘ஆராய்ச்சி’ என்று பொருள்.
EOS-N1 செயற்கைகோள் வரும் திங்கள் கிழமை காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV-C62 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோளில் உள்ள ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் இமேஜிங் தான் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. சாதாரண செயற்கைக்கோள்கள் ஒளியின் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களை மட்டுமே பிரித்து பார்த்து வண்ணப் படங்களை உருவாக்குகின்றன.
ஆனால், EOS-N1 செயற்கை கோள் ஒளியின் நூற்றுக்கணக்கான நுணுக்கமான அலைநீளங்களைப் பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டது. பூமியின் மிகச்சிறிய பொருள்களைக் கூட அடையாளம் காணும் வகையிலான அதிநவீன உணரிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. EOS-N1 பல துறைகளில் இந்தியாவின் “விண்வெளிக் கண்ணாக” இனி செயல்பட உள்ளது.
எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் பதுங்கு குழிகள், கூடாரங்கள் அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை கண்டறியும். இதன் ‘ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல்’ தொழில்நுட்பம், காடுகள் அல்லது மலைகளுக்கு அடியில் மறைக்கப்பட்டுள்ள உலோகப் பொருட்களை அவற்றின் வெப்பம் மற்றும் ஒளி எதிரொலிப்பு மூலம் கண்டுபிடித்துவிடும். பயிர்களில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு, பூச்சித் தாக்குதல் போன்றவற்றை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய உதவும்.
மண்ணில் உள்ள தாதுக்கள் மற்றும் ஈரப்பதத்தின் அளவைத் துல்லியமாகக் கணிக்கும். இது மட்டுமல்லாமல், கடல் நீர் மாசுபாடு, காடுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கனிம வளங்களை தேடுதல் போன்ற பணிகளையும் செய்யும். வெள்ளம் அல்லது நிலச்சரிவு ஏற்படும் போது, மேகமூட்டங்களுக்கு இடையிலும் பாதிப்புகளைக் கணிக்க உதவும். EOS-N1 அனுப்பும் தரவுகள் மிக அதிகமாக இருப்பதால், மனிதர்கள் அதைப் பகுப்பாய்வு செய்வது கடினம். எனவே, இதற்காக பிரத்யேக மென்பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் புதிய மாற்றங்கள் ஏதும் உண்டா?, பயிர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது?, நிலத்தடி நீர் மட்டம் எங்கு அதிகமாக உள்ளது? என்பன போன்ற தகவல்கள் நொடிகளில் பிரித்தெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். PSLV-C62 ராக்கெட் மூலம், 18 சிறிய செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன. இதில் முக்கியமானது AayulSAT, விண்வெளியிலேயே செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும் இந்தியாவின் முதல் முயற்சியாக இந்த செயற்கைகோள் செலுத்தப்படுகிறது.
மற்றொன்று ஸ்பெயின் நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கியுள்ள KID எனப்படும் சிறிய விண்கலம், விண்வெளியிலிருந்து மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பும் தொழில்நுட்பத்தைச் சோதிக்க உள்ளது. EOS-N1 செயற்கைக்கோள் வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், விண்வெளியில் இருந்து உளவு பார்க்கும் மற்றும் புவியைக் கண்காணிக்கும் திறனில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணையும்.


