Last Updated:
அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், கிரீன்லாந்து மீது படையெடுக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரீன்லாந்து மீது படையெடுப்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து. இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது.
கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷ்யா, சீன கப்பல்களால் நிரம்பியுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் கிரீன்லாந்து இணைக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.
இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தாங்கள் கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புவதாக அந்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் கிரீன்லாந்தை கைப்பற்ற கடினமான வழியை தேர்வு செய்வோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், ஆர்க்டிக் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான ராணுவ வழிமுறைகளை ஆராயுமாறு கூட்டு சிறப்பு நடவடிக்கைக் கட்டளைப் பிரிவுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், இது சட்டப்பூர்வமானது அல்ல என்றும் அரசியல் ரீதியாக சாத்தியமற்றது என்றும் அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கிரீன்லாந்து தாக்கப்பட்டால், தங்கள் படைகள் கடுமையாகப் பதிலடி கொடுக்கும் என்று டென்மார்க் எச்சரித்துள்ளது.
கிரீன்லாந்து மீது அமெரிக்கா படையெடுப்பு..? – ராணுவத்திற்கு உத்தரவிட்ட அதிபர் டிரம்ப்!


