Last Updated:
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்; ரெசா பஹ்லவி அழைப்பில் மக்கள் திரண்டு வன்முறை. டிரம்ப், ஈரான் மீது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 65 பேர் உயிரிழப்பு.
ஈரானில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தவறினால் ஈரான் ராணுவத்தினரை சுட்டுக் கொல்வோம் என்றும் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுடன் கடந்த ஆண்டு ஏற்பட்ட போர் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி அழைப்பின் பேரில் நேற்றிரவு நாடு முழுவதும் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இன்று அதிகாலை வரை நீடித்த போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறையும் வெடித்தது. போராட்டக்காரர்கள் சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர். அரசு கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை களைத்தனர். இதனால், நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவியது. கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இதுவரை 9 குழந்தைகள் உட்பட 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து ஈரானில் இணைய வசதி, தொலைபேசி உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் நலனுக்காக போராடி வருவதாகவும், வெளிநாடுகளுடன் தொடர்பில் இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்பை பழிவாங்க வேண்டும் என்றும், வெனிசுலா அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோவை டிரம்ப் கைது செய்தது போன்று தற்போது டிரம்பை கைது செய்ய வேண்டும் என்றும் ஈரான் அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானில் அமைதியாக போராடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். கடந்த காலங்களைப் போன்று, மீண்டும் மக்களை சுட்டுக் கொன்றால், அமெரிக்கா தலையிட நேரிடும் என்றும், ஈரான் ஆட்சியாளர்களுக்கு வலிக்கும் இடத்தில் கடுமையாக தாக்குவோம் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.


