Last Updated:
குடியரசுத் தினத்தன்று டெல்லி அரசு 1275 கிலோ கோழி இறைச்சி வீசி பறவைகளை திசை திருப்ப திட்டம் வகுத்துள்ளது.
குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பறவைகளை திசை திருப்பி விடுவதற்காக சுமார் 1275 கிலோ கோழி இறைச்சியை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தின கொண்டாட்டத்தின் போது, விமான சாகசங்கள் நடைபெற உள்ளன. அப்போது, பறவைகள் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் டெல்லி அரசின் வன விலங்குத்துறை சார்பில் இறைச்சி வீசும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, நகரத்துக்கு வெளிப்புறம் இறைச்சிகளை வீசி கழுகு உள்ளிட்ட பறவைகளை அந்த இடத்துக்கு திசை திருப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி அரசு டெண்டர் கோரி உள்ள நிலையில், 20 இடங்களில் ஒவ்வொன்றிலும் தோராயமாக 20 கிராம் வீதம் 20 முதல் 30 துண்டுகளாக 5 பாக்கெட்டுகளில் சிக்கனை அனுப்பி வைக்க வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,275 கிலோ எலும்பில்லாத கோழி இறைச்சி வாங்க தோராயமாக 4 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் எருமை இறைச்சிகள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், இந்த ஆண்டுதான் முதன்முறையாக கோழி இறைச்சி பயன்படுத்தப்பட உள்ளதாகவும் டெல்லி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


