புவியியல் ரீதியாக இது வட அமெரிக்க பகுதியாக இருப்பதால், அதனை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள டிரம்ப் துடிக்கிறார். இதற்கு முன்னதாக 1867-ஆம் ஆண்டு கிரீன்லாந்தை வாங்க அமெரிக்கா முயற்சி செய்தது.. அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் செவார்ட், கிரீன்லாந்தையும் ஐஸ்லாந்தையும் வாங்க ஆர்வம் காட்டினார்.
1910-ஆம் ஆண்டில், அதிபர் வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் காலத்தில் நிலப் பரிமாற்றத் திட்டம் ஒன்றை அமெரிக்கா முன்வைத்தது. பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டானாவ் தீவிற்கு மாற்றாக கிரீன்லாந்தை அமெரிக்கா கேட்டது. இத்திட்டமும் தோல்வியில் முடிந்தது. 1946-இல் அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன், 10 கோடி டாலர்கள் மதிப்பிலான தங்கத்திற்கு மாற்றாக கிரீன்லாந்தை கேட்டார். ஆனால், இதற்கும் டென்மார்க் ஒப்புக்கொள்ளவில்லை.
டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்திலும், கிரீன்லாந்தை வாங்க முயன்றார். தற்போது, வெனிசுலா மீது நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து, கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என அத்தீவு மக்கள் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், அவர்களுக்கு பணத்தை வாரி இறைக்க முடிவு செய்துள்ளார்.
டிரம்பின் திட்டப்படி, டென்மார்க்கிடமிருந்து பிரிந்து வர கிரீன்லாந்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய மதிப்பில் சுமார் 8.5 லட்சம் முதல் 85 லட்ச ரூபாய் வரை வழங்க ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரீன்லாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 57,000 ஆகும், இவர்களுக்கு இந்தப் பணத்தை வழங்க அமெரிக்காவிற்கு சுமார் 50,000 கோடி ரூபாய் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் பகுதிகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி தனது நாட்டை விரிவாக்கம் செய்துகொள்வதில், அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்கா தான். இதற்கு முன்னதாக, 1803-ஆம் ஆண்டு, பிரான்சிடமிருந்து லூசியானாவை வாங்கியது. இது அமெரிக்கா மேற்கொண்ட மிகப்பெரிய நில ஒப்பந்தமாகும். இதன் மூலம் அமெரிக்காவின் பரப்பளவு ஒரே நாளில் இரட்டிப்பானது.
1819-ம் ஆண்டு அமெரிக்காவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம், புளோரிடாவை வாங்கியது. இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக ஆடம்ஸ்-ஒனிஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது புளோரிடா அமெரிக்காவின் 27-ஆவது மாகாணமாக உள்ளது..
1853-இல், தற்போதைய அரிசோனா மற்றும் நியூ மெக்சிகோவின் தெற்குப் பகுதியான காட்சடனை மெக்சிகோவிடமிருந்து வாங்கியது. முக்கியமான ரயில் பாதை அமைப்பதற்காக இப்பகுதி வாங்கப்பட்டது. 1867-இல் அலாஸ்கா கொள்முதல் என்பது அமெரிக்க வரலாற்றில் மிகவும் புத்திசாலித்தனமான நில ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அலாஸ்காவில் தங்கம், செம்பு, இரும்புத் தாதுக்கள், எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவை பெருமளவில் கிடைக்கின்றன. இன்று அமெரிக்காவின் எரிசக்தி தேவையை பூர்த்திசெய்வதில் அலாஸ்கா முக்கியப் பங்கு வகிக்கிறது.
1917-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்ட Virgin தீவுகள் தான் அமெரிக்கா கடைசியாக பெற்ற பெரிய நிலப்பகுதி. இன்று இவை யு.எஸ். வெர்ஜின் தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஒரு மாநிலமாக அங்கீகரிக்கப்படவில்லை, மாறாக ஒன்றிணைக்கப்படாத பிரதேசமாக உள்ளது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.85 லட்சம்… அதிபர் டிரம்பின் அடுத்தக்குறி… கீரின்லாந்தில் அப்படி என்ன இருக்கிறது..?

