அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும் அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள். டென்மார்க்கின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கும் பங்கு இருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விருப்பத்துக்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, “எந்த ஒரு நாடுக்கும் சொந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த நாடுகளுக்குதான் இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கிரீன்லாந்தில் வசிக்கும் 57,000 மக்களுக்கும் பணத்தாசை காட்டி, டென்மார்க்கிடமிருந்து அவர்களைப் பிரிக்க அமெரிக்கா சதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கிரீன்லாந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 டாலர் முதல் 100,000 டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 லட்சம் முதல் ரூ80 லட்சம் வரை) மொத்தமாகப் பணம் கொடுத்து, அவர்களை அமெரிக்காவுடன் இணையச் சம்மதிக்க வைக்கலாம் என்று ஆலோசித்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்த சதி குறித்த தகவலறிந்த டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், “போதும்… இனி இப்படிப்பட்ட கற்பனைகள் வேண்டாம்” என அமெரிக்காவை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.
ஐரோப்பிய தலைவர்கள், “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; அதன் எதிர்காலத்தை அந்த மக்களே தீர்மானிப்பார்கள்” என்று கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

