செர்டாங்:
பூச்சோங், பண்டார் புத்திரி பகுதியில் உள்ள ஜாலான் புத்திரி 2/1 சாலையில், நேற்று மதியம் கட்டுப்பாட்டை இழந்த லோரி ஒன்று ஏழு கார்கள் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. லோரியின் பிரேக் சிஸ்டம் (Brake system) செயலிழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று (ஜனவரி 8, 2026) மதியம் சுமார் 1.44 மணியளவில் ‘MERS 999’ அவசர அழைப்பு வழியாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இந்த விபத்தில் ஒரு லோரி மற்றும் ஏழு கார்கள் என மொத்தம் எட்டு வாகனங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.
லெபு புத்திரி (Lebuh Puteri) சாலையிலிருந்து பச்சோங் நகர் மையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த லோரி, திடீரென பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சிக்னலில் நின்றிருந்த இரண்டு கார்கள் மீதும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கார்கள் மீதும் அந்த லோரி பயங்கர மோதியது என்று, செர்டாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி முகமட் ஃபரிட் அகமட் கூறினார்.
இந்த விபத்து தொடர்பாக சாலை போக்குவரத்து விதிகள் 1959-இன் 10-ஆவது விதியின் கீழ் (வாகனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறியது) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லோரி ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவருக்குப் போதைப்பொருள் பழக்கம் இல்லை (Negative) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட ஏழு கார் உரிமையாளர்களும் செர்டாங் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகளோ அல்லது யாருக்கும் பலத்த காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




