பொந்தியான்:
பொந்தியான் பகுதியில் உள்ள பல தேசிய தகவல் பரப்பு மையங்களை (NADI) உடைத்துத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 43 வயது ஐஸ் லோரி ஓட்டுநருக்கு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட முகமட் ஹாஸிக் எல்வி ரிமோய் (43) என்பவருக்கு எதிராக, அத்துமீறி நுழைதல் மற்றும் திருடப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்துதல் ஆகிய ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவற்றை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
குகுப்பில் உள்ள பண்டார் பெர்மாஸ், தாமான் நிலாம் மற்றும் பெனூட்டில் உள்ள சுங்கை பிங்கான் ஆகிய இடங்களில் உள்ள NADI மையங்களில் இவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.
பெக்கான் நெனாஸ் மற்றும் பாரிட் சப்ரான் ஆகிய இடங்களில் உள்ள மையங்களிலிருந்து இரண்டு CCTV டிகோடர் (Decoder) கருவிகளைத் திருடி அவற்றை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
முதல் குற்றச்சாட்டிற்கு 6 மாத சிறையும், மற்ற நான்கு குற்றச்சாட்டுகளுக்குத் தலா 12 மாத சிறையும் விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனைகளை அவர் ஒரே காலத்தில் (Concurrently) அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் அவர் மொத்தம் 12 மாதங்கள் சிறையில் இருப்பார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்தச் சிறைத்தண்டனை அமலுக்கு வருகிறது.
இந்த வழக்குகள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 447, 448, 457 (அத்துமீறல் மற்றும் திருட்டு) மற்றும் பிரிவு 414 (திருட்டுப் பொருட்களை மறைத்தல் அல்லது விற்றல்) ஆகியவற்றின் கீழ் கொண்டு வரப்பட்டன.




