Last Updated:
அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தபோது, முதலமைச்சர் மம்தா பானர்ஜி அலுவலகத்தினுள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள IPAC நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்கு நுழைந்து ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள IPAC நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஐடி பிரிவு தலைவராகவும் பிரதீக் ஜெயின் இருக்கும் நிலையில், அவரது இல்லத்திற்கு மம்தா பானர்ஜி அவசர அவசரமாக வந்தார்.
பின்னர் கையில் ஆவணங்களுடன் வெளியே வந்த மம்தா பானர்ஜி, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சோதனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்துவதாக கூறினார். மேலும், தங்கள் கட்சியின் அரசியல் திட்டங்கள், வேட்பாளர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு விசாரணை அமைப்புகள் மூலம் கொண்டு செல்ல இருந்ததாகவும், அதனையே தான் எடுத்துவந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நிலக்கரி கடத்தல் விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் சோதனை நடந்ததாகவும், அப்போது மம்தா பானர்ஜி வந்து அதனை தடுத்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
எந்த கட்சியையும் குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்துமீறி சோதனை நடத்தியதாக ED அதிகாரிகள் மீது மேற்கு வங்க காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சோதனையிட்ட அமலாக்கத்துறை.. கையோடு ஆவணங்களை எடுத்துச் சென்ற மம்தா… மேற்குவங்கத்தில் பரபரப்பு


