மும்பை:
மகாராஷ்டிராவில் இரண்டு நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது கடும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
தேசிய அளவில் எதிரெதிர் துருவங்களாக உள்ள காங்கிரஸ், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பதவிக்காக இவ்வாறு அணி மாறி செயல்பட்டு இருப்பது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ளது அம்பர்நாத் நகராட்சி. 60 உறுப்பினர்களைக் கொண்ட இந்நகராட்சிக்கு கடந்த டிசம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில் சிவசேனா (உத்தவ்) கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு நான்கு இடங்களே குறைவாக இருந்த நிலையில் அக்கட்சி கவுன்சிலர்தான் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜகவைச் சேர்ந்த தேஜஸ்ரீ கரம் சுலே பாட்டீல் என்பவர் காங்கிரஸ் (12), தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார் 4), சுயேச்சைகள் 2 பேரின் ஆதரவுடன் நகராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இதேபோல் 35 உறுப்பினர்களைக் கொண்ட அகோட் நகராட்சித் தேர்தலிலும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, தலைவர் பதவியைக் கைப்பற்றி உள்ளது.
அசாதுதீன் ஓவைசியின் எஐஎம்ஐஎம் (2), இதர கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் களம் இறங்கிய பாஜக வேட்பாளர் நகராட்சித் தலைவராகத் தேர்வானார்.
பாஜகவின் இந்த நடவடிக்கை அர்ப்பத்தனமானது என சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்ஜய் ராவத் காட்டமாக விமர்சித்துள்ளார். “அகோட், அம்பர்நாத்தில் நடந்த சம்பவங்களின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியாகிவிட்டது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பாஜகவுடன் கைகோத்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்களை அக்கட்சித் தலைமை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
எனினும், திடீர் திருப்பமாக நீக்கப்பட்ட 12 பேரும் பாஜகவில் இணைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்ற பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார்.
ஏன் இந்த முரண்பாடான கூட்டணி நிகழ்கிறது?
மூன்றாவது அணியைத் தடுத்தல்: ஒரு மாநிலத்தில் வலிமையான பிராந்திய கட்சி (உதாரணம்: பி.ஆர்.எஸ், திரிணாமுல் காங்கிரஸ் அல்லது ஆப்) இருக்கும்போது, அதை வீழ்த்த தேசியக் கட்சிகள் ரகசிய உடன்பாடு கொள்கின்றன.
பெரிய கொள்கைகளைத் தாண்டி, உள்ளூர் அளவில் அதிகாரத்தைக் கைப்பற்ற கவுன்சிலர்கள் இத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். மேலும் தேசிய அளவில் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் காங்கிரஸும் அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் கூட்டணி அமைத்ததில்லை. எனவே இந்த சம்பவம் அரசியல் வடடாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




